வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (09:18 IST)

எம்ஜிஆர் பெயர் சொல்லித்தான் திமுக அரசியல் செய்ய வேண்டிய நிலை - செல்லூர் ராஜு!

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை சொல்லித்தான் திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பரிதாபத்திற்கு உரியது என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி.

 
மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம் கோவில்பாப்பாகுடி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.
 
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை சிறப்புடன் நடைபெற்று வருகின்றன அதேபோன்று மதுரையில் வைகை ஆறு சீரமைப்பு சாலைகள் மேம்பாடு என பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இது போன்ற பணிகள் திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெறவில்லை.
 
தேர்தல் நெருங்குகின்ற காரணத்தால் எம்ஜிஆரை பெரியப்பா என்று அழைத்து தமிழக மக்களை கவர நினைக்கிறார்கள். ஆனால் இப்போதும் அவர்களது கட்சி பத்திரிகையில் வாங்காத பல்கேரியா கப்பல் குறித்து எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் ஊழல் நடைபெற்றதாக அவதூறு பரப்புகிறார்கள். 
 
எம்ஜிஆரைப் பெரியப்பா என்று அழைக்கும் மு க ஸ்டாலின் அவர் கட்சியை விட்டு வெளியேற்றப்படும் போது அவரது அப்பா கருணாநிதியிடம் ஏன் நியாயம் கேட்காமல் விட்டார். எல்லா கட்சிகளை போலவே திமுகவும் எம்ஜிஆரை சொல்லி ஓட்டு கேட்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
 
உலகத்திலுள்ள நடிகர்களுக்கு யாருக்கும் இல்லாத செல்வாக்கு எம்ஜிஆருக்கு தான் இருந்தது. அதனால்தான் அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது.அப்போது கருணாநிதி எம்ஜிஆர் எனது 40 ஆண்டு கால நண்பர் ஆகையால் எனக்கு வாக்களியுங்கள் அவர் மறுபடியும் உடல் நலம் ஆகி வந்தவுடன் ஆட்சி அவரிடமே ஒப்படைத்து விடுகிறேன் என்றெல்லாம் தமிழக மக்களிடம் கெஞ்சினார் இவையெல்லாம் வரலாறு. தந்தையார் செய்ததை தற்போது அவரது மகன் ஸ்டாலின் செய்கிறார்.
 
பிற மாநிலங்களில் உள்ள பொது வினியோக திட்ட முறை வேறு தமிழகத்தில் உள்ள முறை வேறு. இங்கு அனைத்தும் இலவசமாக பொருட்கள் வழங்கப்படுகின்றன இதற்காக ரூபாய் 6,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பிற மாநிலங்கள் பொது விநியோக திட்ட பொருட்களை விலை வைத்து விநியோகம் செய்கிறார்கள் குறிப்பாக மலைப் பகுதிகளில் சென்று விநியோகம் செய்வதற்கு கூடுதலாக விலை வைக்கிறார்கள். 
 
ஆனால் தமிழகத்தில் எப்பேர்ப்பட்ட மலைப் பகுதியாக இருந்தாலும் நாம் இலவசமாகவே பொருட்களை விநியோகம் செய்கிறோம். பொங்கல் பரிசு பணம் 95.26 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பொது வினியோகத் துறையில் இந்த அளவிற்கு அதிகபட்சமாக வழங்கப்பட்டது இதுதான் முதல் முறை என்றார்.