1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (11:54 IST)

’பாரத மாதாவுக்கு ஜே’- வா? பாஜகவை சாடிய சீமான்!

குஜராத் அரசின் செயல் ஒட்டுமொத்த நாடே வெட்கித்தலைகுனிய வேண்டிய பேரவமானம் என சீமான் கண்டனம்.


குஜராத் மதவெறிப்ப டுகொலைகளின் போது, கர்ப்பிணிப்பெண் பில்கிஸ் பானுவைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற கொலையாளிகளை விடுதலைசெய்திருக்கும் குஜராத் அரசின் செயல் ஒட்டுமொத்த நாடே வெட்கித்தலைகுனிய வேண்டிய பேரவமானம் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, நரேந்திர மோடியின் ஆட்சியில், குஜராத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப் படுகொலைகளின் போது கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானுவைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்றொழித்த கொலைக்குற்றவாளிகளைக் குஜராத் அரசு விடுதலை செய்திருக்கும் செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன்.

துளியும் ஈவு இரக்கமில்லாத வகையில், கர்ப்பிணிப் பெண்ணென்றும் பாராது அவரைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி, அவரது குழந்தையின் உயிரைப்பறித்து, மனித உயிர்களை மலிவானதாகக்கருதி, 14 பேரைக் கொன்றுகுவித்து நரவேட்டையாடிய மதவெறி மிருகங்களைத் தூக்கிலேற்றி, அவர்களுக்கு உச்சபட்சத்தண்டனையைப் பெற்றுத்தராது, முன்விடுதலை செய்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையே வெட்கித்தலைகுனியச்செய்யும் கொடுஞ்செயலாகும்.

கடந்த 2002 ஆம் ஆண்டு, குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திரமோடியின் ஒத்துழைப்போடு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப்படுகொலைகளில், ஏறக்குறைய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டு, பல பத்து கோடிகள் மதிப்பிலான அவர்களது உடைமைகள் சூறையாடப்பட்டு, ஒரு இனப்படுகொலையே நடத்தி முடிக்கப்பட்டது இந்திய நாட்டின் வரலாற்றில் ஒரு கறுப்புப்பக்கமாகும்.

இப்படுகொலைகளின் மூலம், சொந்த நிலத்திலேயே இசுலாமியர்கள் அகதிகளாக்கப்பட்டு, முகாம்களில் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டதை நாடும், ஏடுமறியும். அத்தகையப் படுகொலைகளின்போது, கலவரக்காரர்களிடம் சிக்கிக்கொண்ட பில்கிஸ் பானு எனும் 19 வயது கர்ப்பிணிப்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அவரது 3 வயது குழந்தைத் தூக்கி எறிப்பட்டதால் தலைசிதைந்து இறந்துபோனக் கொடூர நிகழ்வை எவரும் மறந்துவிட முடியாது.

இதில் பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் உள்ளிட்ட 14 பேர் வன்முறையாளர்களால் பச்சைப்படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலை வெறிச்செயலை அரங்கேற்றிய மனித மிருகங்கள் 11 பேருக்கு, குஜராத் மாநில அரசு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, சுதந்திர நாளன்று முன்விடுதலை அளித்திருப்பது நாட்டுக்கே நிகழ்ந்த பேரவமானமாகும். நீதிமன்றங்களின் உத்தரவில்லாது, குஜராத் மாநில அரசே தண்டனைப்பெற்று வந்த கொலைக்குற்றவாளிகளை சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்விடுதலை செய்திருக்கிறது எனும்போது, இதே முடிவை மற்ற மாநிலங்கள் பிற வழக்குகளில் எடுத்தால் நாட்டையாளும் ஆட்சியாளர்கள் ஏற்பார்களா? பாஜக ஆளாத மாநிலங்களுக்கும் குஜராத் மாநில அரசின் முடிவைப் பொருத்திப் பார்ப்பார்களா?

அன்பு, இரக்கம், கருணை, பரிவு ஆகிய குணநலன்களற்று, பாசிசவெறிப்பிடித்து, மதவெறியில் ஊறித்திளைத்து நாட்டைத்துண்டாடும் பாஜக எனும் அரசியல் கட்சி, மானுடக்குலத்திற்கே பேராபத்தானது என்பதற்கு இதுவே நிகழ்காலச்சான்றாகும். எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், அதிகப்படியாக இந்தியக்கொடியைத் தூக்கிப்பிடித்து, தேசப்பக்தி நாடகமிட்டபோதே, எதனையோ செய்யவே இதனைக்கூறி மடைமாற்றம் செய்கிறார்களென எண்ணியது உண்மையாகியிருக்கிறது.

‘பாரத மாதாவுக்கு ஜே’ என நாளும் முழக்கமிட்டுவிட்டு, ஒரு பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தக் கொலைக்குற்றவாளிகளை விடுதலைசெய்திருக்கும் படுபாதகச்செயல் வெட்கக்கேடானது. குஜராத் மாநில அரசின் முடிவுக்கு எனது கடும் கண்டனத்தையும், வன்மையான எதிர்ப்பினையும் பதிவுசெய்கிறேன் என தெரிவித்துள்ளார்.