ரஜினி செய்வது ஆன்மிக அரசியல் இல்லை.. வியாபாரம் : சத்தியராஜ் கடும் தாக்கு
நடிகர் ரஜினிகாந்த் செய்வது ஆன்மிக அரசியல் இல்லை. அது வியாபாரம் என நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதாக தெரிவித்தார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தின் முக்கியமான பிரச்சனைகள் குறித்து அவர் எந்த கருத்து கூறாமல் இருப்பதாக அவரை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதோடு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக அவர் கூறிய கருத்துகளும் கடும் விமர்சனத்துக்கும், எதிர்ப்புகளுக்கும் ஆளானது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தாள் விழா நேற்று சென்னை வேப்பேரியில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ரஜினிகாந்தை தாக்கி பேசினார்.
எந்த சுயநலமும் இல்லாமல், தன் வாழ்க்கையை அர்ப்பணித்து, மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, எதை பற்றியும் யோசிக்காமல், சிறைக்கு செல்வது குறித்து கூட கவலைப்படாமல் களத்திற்கு வருவதற்கு பெயர்தான் அரசியல். அதுதான் சமூக நலன். கணக்குப் போட்டு, திட்டம் போட்டு வருவதற்கு பெயர் வியாபாரம். அந்த வியாபரத்திற்கு அரசியல் என பெயர் வைக்கக் கூடாது. அதற்கு சிலர் ஆன்மிக அரசியல் என பெயர் வைத்துள்ளனர். வெற்றிடம் உருவாகும் போது வருவது அரசியல் இல்லை. அது வியாபாரம்” என ரஜினியை கடுமையாக விமர்சித்து அவர் பேசினார்.
மேலும், இரும்புக்கரம் கொண்டு அடக்குவது ஆன்மிகம் அல்ல. அன்புக்கரம் கொண்டு அரவணைப்பதே ஆன்மிகம் என அவர் கூறினார்.