புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 ஜூலை 2019 (09:06 IST)

பெங்களூர் சிறைக்கு செல்லும் தினகரன் – கையில் புதுப்பட்டியல் !

அமமுகவை விட்டு ஒவ்வொருவராகக் கிளம்பி சென்று வேறு கட்சிகளில் சேர இருக்கும் வேளையில் கட்சியைப் பதிவு செய்யவும் புதிய நிர்வாகிகளின் பெயர்களை வெளியிடவும் ஒப்புதல் பெற சசிகலாவை சந்திக்க பெங்களூர் செல்கிறார் தினகரன்.

அதிமுக பிளவு, சசிகலா தண்டனை ஆகியவற்றால் புதிதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார் தினகரன். ஆனால் அதை இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதியவில்லை. அதற்கான முயற்சிகளை ஏப்ரல் மாதத்தில் இருந்து செய்துவருகிறார் தினகரன். ஆனால் மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் பலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். 

அதில் முக்கிய இழப்பாக டிடிவி தினகரன் மேல் எழுந்த அதிருப்தியால் அவரது வலது மற்றும் இடது கரங்களாக திகழ்ந்த செந்தில் பாலாஜி மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளது அமுமுகவின் பெறும் சரிவாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கீழ்மட்டத்தில் உள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிலரும் கட்சியில் இருந்து விலகி மற்றக் கட்சிகளில் சேர்ந்து வருவதால் சசிகலா வருவதற்குள் கட்சியே காலியாகி விடுமோ என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது மற்றும் புதிய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அடங்கிய பட்டியலை எடுத்துக்கொண்டு தினகரன் இன்று அல்லது நாளை பெங்களூர் சிறைக்கு செல்ல இருப்பதாக அமமுக வட்டாரங்கள் செய்தி கசிந்துள்ளது.