ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2016 (07:13 IST)

உச்சக்கட்ட பரபரப்பில் அதிமுக பொதுக்குழு: பொதுச்செயலாளர் சசிகலாவா? பன்னீர்செல்வமா?

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, பரபரப்பான சூழ்நிலையில் முதன்முறையாக அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெறுகிறது.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அதன் பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று குழப்பம் நீண்டு வருகிறது.

மேலும் ஆண்டு இறுதிக்குள் கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். ஒரு பக்கம் ’சின்னம்மா’ சசிகலாதான் அடுத்த பொதுச் செயலாளராக ஆக வேண்டும் பொன்னையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

அதற்கேற்றார் போல் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பத்திரிக்கைகளிலும் விளம்பரங்கள் ஏகத்துக்கும் கொடுக்கப்பட்டன. இதன் அதீத வெளிப்பாடாக மதுரையில் ‘சசிகலா எனும் நான்’ என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

ஆனால், அதிமுக அடிமட்ட தொண்டர்கள் மற்றும் அதிமுக அபிமானிகள் சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்பதை விரும்பவில்லை. இதன் வெளிப்பாடாகவே ஆங்காங்கே போஸ்டர்கள் கிழிக்கப்படுவதும், சாணி அடிக்கப்படுவதும் நிகழ்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது. ஆனால், ”பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என, கட்சியின் பல்வேறு அமைப்பினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சசிகலா இதுவரை ஒப்புதல் தரவில்லை” எனவும் பொன்னையன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று கூடுகிறது. வழக்கமாக சிறப்பு அழைப்பாளர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள். ஆனால் பொதுச்செயலாளர் இல்லாததால் சிறப்பு அழைப்பாளர்கள் அழைப்பிதழ் யாருக்கும் கொடுக்கப்படவில்லை.