பொதுச்செயலாளர் நியமன விவகாரம்; மார்ச் 28ம் தேதி வரை இழுத்தடிப்பு - சசிகலா திட்டம் என்ன?
அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது தொடர்பாக, அதிமுக எம்.பி.மைத்ரேயன் கொடுத்த புகார் மனுவிற்கு பதிலளிக்குமாறு சசிகலாவிற்கு தற்போது அவர் அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூர் சிறை முகவரிக்கே தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
ஒரு கட்சியில் தொடர்ந்து 5 வருடங்கள் உறுப்பினராக இருந்தவரே, பொதுச்செயாளாராக தேர்ந்தெடுக்க முடியும். ஆனால், 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சியை வீட்டு சசிகலாவை ஜெயலலிதா நீக்கினார். அதன் பின் 3 மாதம் கழித்து 2012ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மீண்டும் இணைத்துக்கொண்டார். எனவே, சட்ட விதிகளின் படி சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என ஓ.பி.எஸ் அணி மனுவில் குறிப்பிட்டிருந்தது.
அதுகுறித்து கடந்த மாதம் 28ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும், இல்லையேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அந்நிலையில் சசிகலா தரப்பிடமிருந்து தேர்தல் கமிஷனுக்கு பதில் அனுப்பப்பட்டது. அதில், தற்காலிகமாகவே சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், எனவே, இதில் விதிமீறல் எதுவுமில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த விளக்கம் தேர்தல் கமிஷனுக்கு திருப்தி அளிக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், சசிகலாவிற்கு அனுப்பிய நோட்டீசுக்கு தினகரன் பதில் அனுப்பியிருந்தார். இதில் அதிருப்தி அடைந்த தேர்தல் கமிஷன் சசிகலாவிற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பும் எனத் தெரிகிறது.
அதாவது, வருகிற மார்ச் 28ம் தேதிக்கு பின் விதிகளின் படி பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடும் தகுதி சசிகலாவிற்கு வந்து விடும். எனவே, அதுவரை ஏதாவது காரணம் காட்டி இந்த பிரச்சனையை இழுத்தடிக்க சசிகலா தரப்பு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.