செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (19:28 IST)

சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' - அறிமுக விழா!

Isha Book

ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' கோவையில் நேற்று (ஆக 18) அறிமுகம் செய்யப்பட்டது. புத்தகத்தின் அறிமுகப் பிரதியை ஶ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு. டி. ஶ்ரீனிவாசன் அவர்கள் வெளியிட அதனை சப்னா புக் ஹவுஸின் தலைமை நிர்வாகி திரு. வி. கார்த்திகேயன் அவர்கள் பெற்றுக் கொண்டார். 

 

 

கோவை பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் அசெம்பிளி ஹாலில் நேற்று நடைபெற்ற விழாவில்  பண்ணாரிஅம்மன் குழுமத்தின் தலைவர் திரு. எஸ்.வி. பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். அவரை தொடர்ந்து ஶ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு டி. ஶ்ரீனிவாசன் பேசுகையில் "சத்குரு எத்தனை நாடுகள் சென்றாலும் அவர்  கோவையில் இருப்பது கோவை மக்களுக்கான பெரும் ஆசி" எனக் கூறினார். 

 

புத்தகம் குறித்து மரபின் மைந்தன் அவர்கள் பேசுகையில் " இருண்டிருக்கும் அறையில் நுழைகிற போது கைவிளக்கு வேண்டும். அதுப் போலத்தான் நமக்கு தெரியாத இடத்தில் பயன்தரும் விதமாய் சத்குரு அவர்கள் இந்த புத்தகத்தில் மிக துல்லியமான விளக்கங்களை கொடுத்துள்ளார்.  மேலும் நமக்கு நேரும் சூழலை விடவும், அதை நாம் எதிர்கொள்ளும் விதம் தான் துன்பத்திற்கு காரணமாக அமைகிறது. அதுமட்டுமின்றி எப்போது நமக்கும், நமக்கு மிகப் பிடித்த விஷயத்திற்கும் இடையே ஒரு சமநிலையை, விலகுதலை ஏற்படுத்துகிறோமோ அதுவே கர்ம வினையை கட்டுப்படுத்தும் என சத்குரு சொல்கிறார்"  என புத்தகத்தின் பல முக்கிய கருத்துக்களை விளக்கி பேசினார். 

 

அவரை தொடர்ந்து புத்தகம் குறித்து வழக்கறிஞர் திருமதி. சுமதி பேசுகையில், "மிகவும் தீவிரமான புத்தகம் இது. இதை ஒரு நாள் முழு அமர்வாக பேச வேண்டிய அளவு தீவிரம் வாய்ந்த புத்தகம். நம் வாழ்கையின் மூல வரைப்படத்தை நாமே உருவாக்கியிருக்கிறோம், என்பது தான் இந்த புத்தகத்தின் ஒன்லைனர். இதை இன்னும் எளிமையாக சொன்னால்  'என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு' என்பது தான் இந்த புத்தகம். மேலும் நாம் ஒரு செயலை செய்கிறோம் அது வெற்றியா, தோல்வியா, பிறருக்கு அது பிடிக்குமா பிடிக்காதா என்பது போன்ற எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி நம் முழு திறனை வெளிப்படுத்துவது ஒன்றே நோக்கமாய் செயல்பட வேண்டும். இது போன்ற நற்கருத்துக்களை இந்த புத்தகம் வலியுறுத்துகிறது" என சுவைப்படப்  பேசினார். 

 

சத்குரு அவர்கள் இந்த புத்தகத்தின் மூலம் கர்மா என்றால் என்ன?, நம் வாழ்வை மேம்படுத்த கர்மா சார்ந்த கருத்துக்களை, நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை குறித்து விவரித்து உள்ளார். மேலும் இந்த சவாலான உலகில் பயணிப்பதற்கு தேவையான படிப்படியான வழிக்காட்டுதலை சூத்திரங்களாகவும் வழங்கி இருக்கிறார். 

 

"கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' புத்தகம் முதலில் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. ஆங்கிலப் புத்தகம் வெளியானது முதல் தற்போது வரை பல லட்சக்கணக்கான பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்து வருகிறது.

 

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் புத்தக வாசிப்பாளர்களால் ஆங்கில புத்தகத்திற்கு சர்வதேச அளவில் 4.7  ரேட்டிங்கும் (மதிப்பீடு), 15,000-க்கும் அதிகமான மதிப்புரைகளும் வழங்கப்பட்டு உள்ளது. இப்புத்தகம் 'NewYork Best Seller" லிஸ்ட்டில் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 25-க்கும் அதிகமான உலக மொழிகளில் இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு உரிமம் கையெழுத்தாகி உள்ளது.

 

உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இப்புத்தகம் தற்போது தமிழில் அறிமுகம் செய்யப்படுவது வாசகர்கள், தமிழ் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.