1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (13:34 IST)

படிக்காமல் பதிவிட்டு விட்டேன் - மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்

பெண் செய்தியாளர்கள் பற்றி இழிவான பதிவை வெளியிட்டிருந்த நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

 
பெண் செய்தியாளர் கன்னத்தில் ஆளுநர் தட்டிய விவகாரம் பூதாகரமாகியது. அந்த செய்தியாளர் அதை தன் டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட, ஆளுநர் இறங்கி வந்து மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது. 
 
அந்நிலையில், வேறொருவர் இட்ட பதிவை தனது முகநூல் பக்கத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். அதில், பெண் பத்திரிக்கையாளர்களை மிகவும் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இதுபற்றி புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியிருந்தார். கனிமொழி எம்.பி.யும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தவறு என தமிழிசை சவுந்தர்ராஜனும் கூறியிருந்தார். அவர் மீது காவல் துறையில் புகாரும் அளிக்கப்பட்டது.
 
அதையடுத்து, எஸ்.வி.சேகர் அந்த பதிவை நீக்கிவிட்டார். ஆனாலும், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தொடர்ந்து எஸ்.வி.சேகருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், இந்த செயலுக்காக எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மனவருத்தம் ஏற்பட்டுள்ள பத்திரிக்கை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொலைப்பேசி மூலமாக பேசிய எஸ்.வி.சேகர்  அது என்னுடைய கருத்து அல்ல. திருமலை என்ற என் நண்பர் பதிவிட்டதை படிக்காமல் பதிவிட்டேன். தரம் குறைந்த தனி மனித விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. இனிமேல், கன்னியமாகவும், கௌரமாகவும் பதிவு செய்வேன். தவறு செய்வது மனித இயல்பு. இனிமேல், எதையும் சரியாக படிக்காமல் பதிவு செய்ய மாட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.