எம்.எல்.ஏ லெட்டர்பேடில் மன்னிப்பு கடிதம் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர்
பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகர் தான் எம்.ல்.ஏ.வாக இருந்த போது அரசு அளித்த லெட்டர் பேடை தற்போது பயன்படுத்தியுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர்களை மிகவும் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் இடம் பெற்றிருந்த ஒரு பதிவை இட்டிருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து, எஸ்.வி.சேகர் அந்த பதிவை நீக்கிவிட்டார். ஆனாலும், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தொடர்ந்து எஸ்.வி.சேகருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். மேலும், பத்திரிக்கையாளர் சங்கங்களும் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன.
எனவே, இந்த விவகாரத்தில் எஸ்.வி.சேகர் இன்று மன்னிப்பு கேட்டுள்ளார். நண்பரின் பதிவை படித்துப் பார்க்காமல் பதிவு செய்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.
அந்த மன்னிப்பு கடிதம் எஸ்.வி.சேகர் மைலாப்பூர் எம்.எல்.ஏ.வாக இருந்த போது பயன்படுத்திய லெட்டர்பேட் ஆகும். அதில், அரசு முத்திரையும் உள்ளது. ஆனால், முன்னாள் எம்.எல்.ஏ என குறிப்பிட்டு அந்த லெட்டர் பேடை எஸ்.வி.சேகர் பயன்படுத்தியுள்ளார். தற்போது இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.
எப்படி ஒரு அரசு லெட்டர்பேட் பயன்படுத்தலாம், இந்த சின்ன இங்கிதம் கூட தெரியலையே. இமெயில் விசயம் மைலாப்பூர் எம்.எல்.ஏவுக்கு இந்த மேட்டர் தெரியுமா?! என சிலர் கிண்டலடித்துள்ளனர்.
மேலும், அந்த லெட்டர் ஹெட் எம்.எல்.ஏக்களுக்காக அரசாங்கம் அடிச்சு குடுத்தது. தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லாத எஸ்.வி.சேகர் அதை எப்படி பயன்படுத்தலாம்? மைலாப்பூர் எம்எல்ஏ என்ற இமெயில் முகவரி, தற்போது மைலாப்பூர் எம்எல்ஏவாக இருக்கும் நட்ராஜுக்குதானே சொந்தம். அதை எப்படி சேகர் பயன்படுத்தலாம்?. லெட்டர்பேடுல அரசு சின்னத்தை முன்னாள் எம்எல்ஏ எப்படி பயன்படுத்தலாம்? என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரமும் எஸ்.வி.சேகருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.