வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 ஜூலை 2018 (10:48 IST)

டெல்லியில் அசிங்கப்பட்ட ஓபிஎஸ் : காரணம் என்ன?

டெல்லி சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்காமல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர்த்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
வருமானத்திற்கு அதிகமான சொத்துகள் சேர்த்துள்ளதாக ஓபிஎஸ் மீது கடந்த மார்ச் 10ம் தேதி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடும் போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துக்களின் பட்டியலுக்கும், வருமான வரித்துறையில் செலுத்தியுள்ள சொத்துக்குகளின் விவரங்களுக்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
 
அதுபோக, ஓ.பி.எஸ்-ஸின் மனைவி, சகோதரர், மகன்கள் மற்றும் மகளின் பெயரில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், சேகர் ரெட்டியின் டைரியில் ஓ.பிஎஸ்-க்கு ரூ. 4 கோடி கொடுக்கப்பட்டது என எழுதி வைக்கப்பட்டது குறித்தும், பினாமி பெயரில் பல கோடி சொத்துக்களை ஓபிஎஸ் குடும்பம் சேர்த்துள்ளது குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 3 மாதங்களாகியும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இந்த வழக்கை ஏன் சிபிஐ-க்கு மாற்றக்கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது. இது ஓ.பி.எஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

 
எனவே, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை அமைக்க வேண்டாம் என கோரிக்கை வைப்பதற்காகவே ஓ.பி.எஸ் நேற்று டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. இதை ஏற்கனவே தெரிந்து கொண்ட மத்திய உளவுத்துறை, இதுபற்றி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தகவல் அனுப்பி விட்டதாம். அவர் மூலமாகவே, ஓ.பி.எஸ்ஐ சந்திக்க வேண்டாம் என நிர்மலா சீதாராமனுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதனால்தான், வாசலின் வெளியே ஓ.பி.எஸ், மைத்ரேயன் எம்.பி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் என அனைவரும் காத்திருந்தும், மைத்ரேயனை மட்டுமே உள்ளே அழைத்து பேசினார் நிர்மலா சீதாராமன். எவ்வளவு கேட்டும் ஓ.பி.எஸ் உள்ளே அனுமதிக்கப்படவில்லையாம்.

 
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் மீது உள்ள கோபத்தில்தான் அவருக்கு நெருக்கமான செய்யாதுரை மற்றும் அவரின் சம்பந்தி சுப்பிரமணியன் உள்ளிட்ட நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 
 
மத்திய அரசின் கோபத்தை புரிந்து கொண்ட எடப்பாடி தரப்பு, பாஜக அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. ஆனாலும், டெல்லியில் இன்னும் கோபம் தணியவில்லை எனத் தெரிகிறது. அதனால்தான், ஓ.பி.எஸ் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
இதனால்தான், இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு  ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா கூறியுள்ளார்’ என மழுப்பலான  பதிலை ஓ.பி.எஸ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.