திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 30 ஜனவரி 2017 (16:09 IST)

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் புகைப்படம் இல்லை: உளவுத்துறை அறிக்கை பொய்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் புகைப்படத்துடன் இருசக்கர வாகனத்தில் அன்னிய சக்திகள் போராட்டக் களத்தில் புகுந்தனர் என்பது பொய் என்று தெரியவந்துள்ளது.


 

 
சென்னை மெரீனாவில் நடத்த அறவழி போராட்டம் இறுதி நாளன்று கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் காவல்துறையினர் வாகனங்களுக்கு தீ வைப்பது, வாகனங்களை அடித்து உடைப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
 
இதையடுத்து மாணவர்கள் நடத்திய அறவழி போராட்டத்தில் அன்னிய சக்திகளும், தேசவிரோதிகளும் புகுந்ததே வன்முறைக்கு காரணம் என்று காவல்துறையினர் காரணம் கூறினர். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்து சட்டசபையில், மாணவர்கள் போராட்டத்தில் நடத்திய பின்லேடன் வேடம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வன்முறையாளர்கள் புகுந்துள்ளனர். இதுவே மெரீனாவில் நடந்த கலவரத்துக்கு காரணம் என்று தெரிவித்தார்.
 
பின்லேடன் புகைப்படத்துடன் இருசக்கர வாகனத்தில் செல்வது போன்ற புகைப்படம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உள்ளது இல்லை என்று கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதுகுறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா.ஜே.அப்துல்ரஹீம் கூறியதாவது:-
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். அப்போது எங்கள் கட்சியினர் பின்லேடன் படம் வரையப்பட்ட இருசக்கர வாகனத்தில் வந்தனர். அந்த புகைப்படத்தை தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் சொல்கின்றனர். காவல்துறையினர் கொடுத்த அறிக்கையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சட்டசபையில் வாசித்துள்ளார். 
 
மேலும் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவு செய்ததோடு, மெரீனா போராட்டக்குழுவினரை விமர்சித்து இருந்தார். இதற்கு உடனடியாக நான் பதிலடி கொடுத்தேன், என்றார்.
 
புலனாய்வு செய்ய வேண்டிய காவல்துறையினர், சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படத்தை எடுத்து இதுதான் காரணம் என்று முதல்வருக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். இதன்மூலம் காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு காரணம் கூறியது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.
 
கூட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்ட காவல்துறை, சமூக விரோதிகள் போராட்டத்தில் புகுந்ததால் வன்முறை வெடித்து கலவரமாக மாறியது என்று காரணம் கூறி வருகின்றனர்.