இறந்த வேட்பாளர் வென்றால் மீண்டும் தேர்தல்! – தேர்தல் தலைமை அதிகாரி அறிவிப்பு!
ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் மறு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சி வேட்பாளர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் மாதவராவ் என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது மாதவராவ் வெற்றி உறுதியானால் அவர் இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு, மறைந்த வேட்பாளர் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அத்தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.