வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்கியான்
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2019 (15:06 IST)

தமிழக அரசியலில் ரஜினிக்கு எதிர்ப்பு : விஜய் வந்தால் ஆதரவு ! - சீமான் அதிரடி

தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது என தமிழக அரசியல் தலைவர்கள் கூக்குரலிட்ட தருணம் இப்போதில்லை எனும்படி தமிழகத்தில் ஆளும் கட்சி , எதிர்க்கட்சிகளின் எழுச்சிகரமான நடவடிக்கைகள்  இருக்கிறது. இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வந்தால், அவர் தமிழன் என்பதால் அவருக்கு ஆதரவு; ஆனால் ரஜினிக்கு எதிர்ப்பு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது தமிழகத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சமீபத்தில், வேலூரில் நடைபெற்ற தேர்தலில், திமுக, அதிமுகவை வீழ்த்தி வெற்றிபெற்றது. எனவே முதலில் பணப்பட்டுவாடாவால் தடைப்பட்ட தேர்தல்  ஆணையத்தால் ரத்துசெய்யப்பட்டு, மறுதேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக., பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் கணிசமான வாக்குகள் பெற்று பெற்றிபெற்றார். தற்போது எதிர்க்கட்சியான திமுக., நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் திமுகவின் மீது விழுந்த வெற்றிடம் என்ற பேச்சைத் தன் வெற்றிச் செயலால்  துடைத்து எறிந்து விட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அடுத்து ஆளுங்கட்சியின் அதிகாரப்பரவல் என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது, அவரைச்சுற்றி மட்டுமே வந்துகொண்டிருந்தது. அவர் விரலசைத்தால்தான் எந்த அமைச்சரும் ஊடகத்தில் மைக்கில் தன் பேச்சை தெளிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு, இன்றைய ஆளுங்கட்சியைப் பற்றி, அதன் தலைமை மூன்றாக உடைந்ததைப் பற்றி யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் இபிஎஸ்., மற்றும் ஓபிஎஸ்.,   ஒன்றாக இணைந்து தமிழத்தில் முதல்வர் – துணை முதல்வர்களாக ஆட்சி புரிகிறார்கள்.

மூன்றாவதாக முளைத்த தினகரனின் அமமுக.,கட்சி இன்று காலவெள்ளத்தில் கரைந்துகொண்டுள்ளது. அமைச்சர்களுக்கு தலைமை கட்டுப்பாடு விதித்ததாலும் சிலர் உணர்ச்சிவசத்தில் வார்த்தைகளை கொட்டிவிடுவது அவர்களின் மாண்பை மக்களிடம் குறைத்து  காட்டுவதாய் அமைந்துவிடுகிறது. இது ஆளுங்கட்சிக்கு பலவீனமாய் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் முதல்வர் இபிஎஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று, தமிழகத்துக்கு ரூ. 8835 கோடி அளவிலான  முதலீடுகளை ஈர்த்துவந்துள்ளார். 

முதல்வரின் இந்த வெற்றிப்பயணம், எதிர்க்கட்சிதலைவரின் விமர்சனத்துக்கான தக்க செயல்பூர்வமான பதிலடி என்றே பார்க்கப்படுகிறது.  எனவே, ஆளுங்கட்சியில் நிலவிய வெற்றிடத்தை தற்போது, முதல்வர் மற்றும் துணைமுதல்வர்களான இபிஎஸ் - ஒபிஎஸ் நிரப்பியுள்ளனர் என்றே கொள்ளலாம்! ஏனென்றால் எந்த செயலுக்கும் விமர்சனம் இல்லாமல் இருக்காது. குழந்தை பிறந்த பின், அதன் அழகு கன்னத்தில் யார் கண்ணுப்படுமோ என  திருஷ்டி கழிக்க மையால் பொட்டு வைப்பதில்லையா அதுபோல்தான் இந்த விமர்சனங்களும்.

இந்த நிலையில், விஜய் மீது அதீத பாசம் கொண்டவர் போல், சீமானின் இன்றைய பேச்சு இருக்கிறது. அதாவது தமிழக அரசியலில் விஜய் வந்தால் அவருக்கு ஆதரவு என்றும், ரஜினி தமிழர் அல்ல என்பதால் அவருக்கு எதிர்ப்பு என்று அவர் கூறியுள்ளதை சற்று ஆழமாகப் பார்த்தால்... ரஜினியே ஒரு மேடையில் தன் பூர்வீகம் தமிழ்நாடு தான் என விளக்கியிருக்கிறார். ஆனால் அவரை வம்புக்கு இழுக்கும்படி சீமான் பேசியுள்ளது ரஜினி இன்னும் அரசியலுக்கு வராமல் காலம் தாழ்த்துவது சரியில்லை என்பதையே படம் பிடித்துக்காட்டுகிறது.

அடுத்து, விஜய்க்கு சீமான் ஆதரவு கொடுத்துள்ளதால், விஜய் படத்தை பட்டி தொட்டியெல்லாம், நாம் தமிழர் கட்சியினர் ஓடச் செய்துவிடப்போவதாக அர்த்தமில்லை. ஆனால் சீமானில் பேச்சிலும் அரசியல் சாதுர்யம் இருப்பது மட்டும் தெளிவாய்த் தெரிகிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்றும் அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு என்றும் என மாற்றி மாற்றி கூறியவர் சீமான்.

ஒருவேளை, விஜய்யின் மீதான கருத்தை அவர் எதிர்காலத்தில் மாற்றினாலும் வியப்பில்லை. அவரது ரஜினி குறித்தான சூடான பேச்சும் அப்படியே பொருள் கொள்ளத்தக்கது. அதனால் சீமானின் பேச்சை சீமானின் தம்பிகள் தவிர வேறு யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.