ரஜினிகாந்த் - சிவா கூட்டணி உறுதியானது: அஜித்தை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறார் சிவா - அதிகாரபூர்வ அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் 168 -வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இயக்குநர் சிவா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் அஜித்துடன் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து நான்கு திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சிவா.
இந்த ஆண்டு ஒரே நாளில் துவக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் அஜித் நடித்த இரு படங்கள் ஒன்றாக வெளியாயின. பேட்ட மற்றும் விஸ்வாசம் என இரு திரைப்படங்களும் ஒன்றாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. விஸ்வாசம் திரைப்படத்தை இயக்கியவர் சிவா என்பது குறிப்பிடத்தக்கது
யார் இந்த இயக்குநர் சிவா?
ஒளிப்பதிவாளராக சினிமா வாழ்வை தொடங்கியவர் சிவா. கடந்த 2002-ம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த சார்லி சாப்ளின் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
அதன் பின்னர் தொடர்ந்து டோலிவுட்டில் கோலோச்சினார். 2008-ம் ஆண்டு சௌர்யம் என்ற பெயரில் தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்கினார்
அதற்கு அடுத்த ஆண்டே, செங்கம் என்ற பெயரில் கோபிசந்த், திரிஷா நடிப்பில் ஒரு திரைப்படத்தையும் இயக்கினார்.
கடந்த 2011-ம் ஆண்டு தமிழில் இயக்குநராக சிவா அறிமுகமானார். நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை திரைப்படம்தான் தமிழில் சிவா இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம். இந்த படம் வெற்றியடைந்ததையடுத்து சிறுத்தை 'சிவா' என்று சினிமா ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்பட்டார்.
பின்னர் மீண்டும் ஒரு தெலுங்கு திரைப்படத்தை இயக்கியபின்னர் நடிகர் அஜித்துடன் சேர்ந்தார். 2014-ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வீரம் வெளியானது. அதற்கடுத்த ஆண்டே வேதாளம் திரைப்படமும் வெளியானது.
இவ்விருவர் கூட்டணியில் 2017-ல் பெரும் பொருட்செலவில் நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த விவேகம் ரிலீசானது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சிவா - அஜித் கூட்டணியில் விஸ்வாசம் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் முன்னணி நடிகர் ஒருவரை வைத்து தொடர்ச்சியாக நான்கு திரைப்படங்கள் எடுத்தவர் என்ற பெருமை சிவாவைச் சேரும்.
ரஜினியின் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது தர்பார் திரைப்படம் தயாராகிவருகிறது. இதையடுத்து சிவாவின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த்.
இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியிருக்கிறது.