புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (08:28 IST)

இதுலயும் ஆல்கஹால்தானே இருக்கு! – மது கிடைக்காமல் ஷேவிங் லோஷனை குடித்தவர்கள் பலி!

ஊரடங்கால் மது கிடைக்காத சூழலில் அதற்கு பதிலாக ஷேவிங் லோஷனை குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதுடன், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் அல்லல்படும் மதுவுக்கு அடிமையான சிலர் கள்ளச்சாராயத்தை நாடுவது மற்றும் இன்ன பிற ஆபத்தான காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டையில் மது கிடைக்காததால் விரக்தியடைந்த மீனவ வேலை பார்க்கும் மூன்று பேர், ஷேவிங் செய்த பின் பயன்படுத்தும் லோஷனில் ஆல்கஹால் உள்ளதால் அதை பருகலாம் என முடிவெடுத்துள்ளனர். குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து பருகியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அன்வர் ராஜா என்ற நபர் மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.