1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2024 (16:33 IST)

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு..! குடிநீர், மின்சாரம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு..!!

Manjolai
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 
 
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட்டில் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்  மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கான குத்தகை காலம்  முடிவடைவதற்கு முன்பாகவே பிபிடிசி நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஆகஸ்ட் 7-க்கு முன்பு வெளியேற வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,  மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து  உத்தரவிட்டது.

Madurai Court
இந்நிலையில், மாஞ்சோலையைச் சேர்ந்த ஜான் கென்னடி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசின் டான்டீ (TANTEA) நிறுவனம் எடுத்து நடத்தி, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும் இந்த வழக்கு முடியும் வரை மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

 
மாஞ்சோலை விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்றும் இந்த மனு தொடர்பாக தமிழக அரசும், பிபிசிடி நிறுவனமும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஜூலை எட்டாம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.