1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 டிசம்பர் 2024 (09:28 IST)

வெள்ளத்தில் சிக்கிய தனியார் பேருந்து.. பயணிகளை கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென தனியார் பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பேருந்தில் உள்ள பயணிகளை கயிறு கட்டி இழுத்து காப்பாற்றியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றதால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையும் காண்கிறோம்.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகே பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென வெள்ளத்தில் சிக்கியது. இதனை அடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தால் அலறிய நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக கயிறு உதவியுடன் பயணிகளை மீட்டனர்.

கிளியாற்று வெள்ளத்தில் தனியார் பேருந்து சிக்கிக் கொண்டதாகவும், வெள்ளத்தால் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் பேருந்தை ஓட்டுநர் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாகவும் தெரிகிறது.

இந்த சூழலில் பவுஞ்சூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதாகவும், அதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Edited by Siva