திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2017 (16:05 IST)

பெண்களிடம் வீரத்தைக் காட்டிய காவல் துறையினர்! - பகீர் ரிப்போர்ட்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும் க்குக்கு பொங்கல் பண்டிகையை ஓட்டி தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றது.


 

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதியான முறையில் போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்தது. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தினர். பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன.

பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீது தடியடி நடத்தியதால், அங்கிருந்து தப்பிச் சென்ற போராட்டக்காரரகளுக்கு, அயோத்தி குப்பம், நடுக்குப்பம், அம்பேத்கர் பாலம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் உள்ள மீனவ மக்கள் ஆதரவு அளித்தனர்.

இதனையொட்டி, அயோத்தி குப்பம், நடுக்குப்பம் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் எரித்து நாசப்படுத்தப்பட்டன. காவல் துறையினர் அங்கு வசிக்கும் பெண்களிடம் முறைகேடாகவே நடந்துள்ளனர்.

வீட்டில் ஆம்பளைங்க இல்ல சார் என கெஞ்சியும், ஏன் எங்களை பார்த்தா ஆம்பளைங்க மாதிரி இல்லையா? உன் வீட்டுல இருக்கிறவன் எல்லாம் பொட்டைங்க, என் கூட வாடி எனக் கூறி அவர்கள் தங்களின் முழுகால் சட்டையை கழற்றி அறுவறுப்பாக நடந்து கொண்டுள்ளனர். சில பெண்களின் மார்புகளையும் கசக்கியுள்ளனர். அப்போது குழந்தைகளும் அங்கிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாடு வளர்த்த காரணத்திற்காகவே ஒரு பெண்ணின் மண்டை பிளக்கப்பட்டுள்ளது. அதற்காக அந்த பெண்ணை வசை மாறியும் பொழிந்துள்ளனர். உங்களுக்கு காளை கேட்குதா காளை எனக் கூறியும், சிலரை சாதியை குறிப்பிட்டும் அடித்துள்ளனர்.

கருப்பு சட்டை அணிந்த காரணத்திற்காகவே ஒருவரை பிழிந்து காவாக்கரையில் வீசி மண் மூட்டைகளை வீசி உள்ளனர். அந்த நபர் மிக ஆபத்தான நிலையில் உள்ளார். அங்கிருந்த மாடுகளை அடித்து துன்புறுத்திய்ள்ளனர். வயதானவர்களையும் அடித்துள்ளனர்.

தப்பி வந்த மாணவர்களுக்கு தண்ணீர் கொடுத்த காரணத்திற்காகவே இங்கும் வன்முறையை நிகழ்த்தியுள்ளது இந்த ஏகாதிபத்திய அரசு. பாட்டாளி வர்க்கத்தின் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசியிருக்கிறது இந்த அரசாங்கம்.

மீனாம்பாள்புரத்தில், மாடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளியை இழுத்து வந்து தெருவில் போட்டு அடித்துள்ளனர்.

இது குறித்து அவர் கூறுகையில், “சாலையில் இருந்தபடி குடியிருப்புகளில் போலீசார் சகட்டுக்கும் கற்களை வீசி தாக்கினர். இதில் வீடுகளில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தேன். பயந்து போய் படுத்துக் கொண்டேன். சிறிதுநேரத்தில் மாடிக்கு வந்த போலீசார் அடித்து கீழே இழுத்து சென்று ஓடவிட்டு அடித்தனர். இதில் மண்டை, கை உடைந்தது. தலையில் 10 தையல் போட்டிருக்கிறது. கையில் கட்டு போடப்பட்டிருக்கிறது” என்றார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து யாரும் குடியரசு தினத்திற்காக செல்லவுமில்லை. விரும்பவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.