விநாயகர் சிலைகளை அப்புறப்படுத்திய அதிகாரிகள்! – இந்து முன்னணி தண்ணீர் தொட்டி போராட்டம்!
திருச்சியில் அரசு உத்தரவை மீறி அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுவெளியில் விநாயகர் சிலைகள் அமைக்கவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி முசிறி அருகே கொளக்குடி கிராமத்தில் தமிழக அரசின் தடையை மீறி பொதுவெளியில் பெரிய விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உடனடியாக அங்கு விரைந்த காவல் துறையினர் பொதுவெளியில் வைக்கப்பட்ட 11 விநாயகர் சிலைகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருகே இருந்த 50 அடி உயர தண்ணீர் தொட்டியில் இந்து முன்னணியினர் சிலர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு எழுந்த நிலையில் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்துள்ளனர். இதேபோல் தோட்டியத்திலும் விநாயகர் சிலைகள் அகற்றப்பட்டதால் இந்து முன்னணியினர் தண்ணீர் தொட்டியில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளதா என திருச்சி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.