15 வயதில் முதல் திருமணம்; 17 வயதில் இரண்டாவது திருமணம்! – இளம்பெண்ணின் கணவர்கள் கைது!
18 வயது பூர்த்தியடையாத இளம்பெண்ணை திருமணம் செய்த இருவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் கோயம்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் சரவணம்பட்டியை சேர்ந்த 15 வயது இளம்பெண்ணை திண்டுக்கல்லில் வெல்டிங் வேலை பார்த்து வந்த ஒருவருக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். பிறகு தனது கணவர் வீட்டில் இளம்பெண் வசித்து வந்த நிலையில் சமீபத்தில் உறவினர் ஒருவரை பார்க்க மருத்துவமனை சென்றபோது அங்கிருந்த டிரைவர் சிவா என்பவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் மொபைல் எண்களை பரிமாறி கொண்ட நிலையில், இந்த விஷயம் பெண்ணின் கணவருக்கு தெரிய வர இருவருக்கும் சண்டை மூண்டுள்ளது. இதனால் மீண்டும் தனது தாயார் வீட்டிற்கு சென்ற இளம்பெண் ட்ரைவர் சிவாவுடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவர் வீட்டிலிருந்து மாயமாகி விட்டதாக இளம்பெண்ணின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
விசாரணையில் தன்னுடன் பேசி வந்த டிரைவர் சிவா இளம்பெண்ணை கடத்தி சென்றதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து கொடைக்கானல் மஞ்சூர் பகுதியில் இருந்த இளம்பெண்ணை மீட்ட போலீஸார் டிரைவர் சிவாவை கைது செய்துள்ளனர். மேலும் 15 வயதிலேயே முதல் திருமணம் செய்து கொண்ட முதல் கணவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.