மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க திமுக அழைப்பு விடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவற்றால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக குற்றம் சாட்டிவரும் திமுக, இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அறிவித்து அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது.
இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் புறக்கணித்துள்ளது.
இதுகுறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்மொழிக் கொள்கைக்கு மக்கள் ஆதரவாகவே இருப்பதாகவும், தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசு எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை, அப்படி எடுத்தாலும் தமிழகத்திற்கு தொகுதிகள் கூடுமே தவிர குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது சமீபமாக தமிழ்நாட்டில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைத்திருப்புவதற்கான கூட்டம் என த.மா,க கருதுவதால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K