அடுத்த ’விக்கெட்’ நான் இல்லை… விளக்கம் அளித்த பிரமுகர் ? – தினகரன் நிம்மதி பெருமூச்சு!
தினகரன் கட்சியில் இருந்து அடுத்ததாக திமுகவுக்கு செல்வதாகக் கூறப்பட்ட பழனியப்பன் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் படுதோல்வியால் தினகரனின் அமமுக கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி வருகிறது. கடந்த இரு தினங்களாக தங்க தமிழ்செல்வன் - டிடிவி தினகரன் முட்டல் மோதல் ஆடியோ ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் வகித்து வந்த அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயளாலர், அமமுக கொள்கை பரப்பு செயளாலர் என அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது. அவரும் நேற்று காலை திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துவிட்டார்.
தினகரனின் வலதுகை என அழைக்கப்படும் மேற்கு மண்டல முன்னணித் தலைவர் பழனியப்பனை திமுக தன் பக்கம் இழுக்கப் பார்ப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்காக திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனே பழனியப்பனிடம் பேரம் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் வலம் வந்தது.
இதையடுத்து நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பழனியப்பனிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது ‘நானே அந்த செய்தியை வாட்ஸ் ஆப்பில்தான் பார்த்தேன். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. தொண்டர்களைக் குழப்பவே இது போன்ற வேலைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் மாற்று அணிக்கு நான் செல்லப்போவது இல்லை. இது சம்மந்தமாக யாரும் என்னிடம் பேசவில்லை’ எனக் கூறியுள்ளார். இதனால் அடுத்த விக்கெட்டும் காலியாகிவிடுமோ எனப் பயந்து கொண்டிருந்த தினகரனுக்கு ஒரு சிறு நிம்மதிக் கிடைத்துள்ளது.