தந்தை ஈமச்சடங்கில் கலந்து கொள்ள நளினிக்கு ஒரு நாள் பரோல்
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் இருக்கும் நளினிக்கு, தந்தையின் ஈமச்சடங்கில் கலந்து கொள்ள, ஒருநாள் பரோல் கிடைத்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 24 வருடங்களுக்கும் மேலாக நளினி சிறையில் வாடி வருகிறார். அவரின் தந்தை கடந்த மாதம் 23ஆம் தேதி மரணம் அடைந்தார். அதையடுத்து 24ஆம் தேதி, நளினி ஒரு நாள் பரோலில் வெளி வந்து, தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.
தற்போது அவரது தந்தையின் ஈம காரியங்கள் நடக்க உள்ளதால், அதில் கலந்து கொள்ள மார்ச் 8,9,10 ஆகிய மூன்று நாட்கள் பரோல் கேட்டு கடந்த 2ஆம் தேதி சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், சிறைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சென்னை உயர்நீதி மன்றத்தில் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. ஆனால் அவருக்கு பரோல் அளிக்கக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. ஆனால். தந்தையின் ஈமச்சடங்கில், மகள் என்ற முறையில் கலந்து கொள்ள வேண்டும் என நளினி சார்பில் வாதிடப்பட்டது.
நளினி தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி மாலா, அவருக்கு ஒருநாள் பரோல் கொடுத்து உத்தரவிட்டார். இன்று மாலை 4 மணி முதல் நாளை காலை 4 மணி வரை நளிக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
நளினி உட்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 24 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முயற்சி எடுத்து வருவதாக கூறிவரும் வேளையில், நளினிக்கு பரோல் கொடுக்கக்கூடாது என்று தமிழக அரசு ஏன் வாதிடுகிறது என்பது புரியவில்லை என்று சமூக ஆர்வலகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.