1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (10:04 IST)

1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸா? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பள்ளி பாடங்கள் ஆன்லைன் மூலமாகவே நடந்து வந்த நிலையில் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெற்றன. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்த வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக 1 முதல் 9ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Pallikalvithurai

இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளதால் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை ”திட்டமிட்டபடி 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நேரடியாக நடைபெறும்,. தேர்வு இல்லை என பரவும் தகவல்கள் பொய்யானது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி மே 6 முதல் 13ம் தேதிக்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.