செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 13 செப்டம்பர் 2014 (19:38 IST)

தேர்தலை புறக்கணித்த கட்சிகள் பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பா.ஜ.க.வின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
 
தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல் மன பலத்துக்கும், பண பலத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தலாகும். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் மிரட்டப்படுவதும், கடத்தப்படுவதும் நடந்து வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தால் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினரை போல் பேசுகிறார்கள்.
 
தற்போது நடைபெறும் இந்த தேர்தல் தேவையில்லாத ஒன்றாகும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சியின் மேயராக இருந்தவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது.
 
இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ஜ.க. போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு முழுமையாக எங்களுக்கு கிடைத்துள்ளது. இதேபோல் தேர்தலில் ஒதுங்கியிருக்கும் மற்றும் புறக்கணித்திருக்கும் கட்சிகளும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
 
அமைச்சர்கள் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாமல் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என கோவையில் முகாமிட்டுள்ளனர். பிரச்சாரத்துக்கு குவிந்துள்ள அமைச்சர்கள் மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்க இதேபோல் வந்திருந்தால் அவர்களை வரவேற்றிருப்போம்.
 
கோவை பா.ஜ.க. வேட்பாளர் நல்ல திறமையானவர். அவரை இந்த தேர்தலில் வெற்றி பெற வைத்தால் கோவை மாநகரை சிறந்த நகரமாக உருவாக்க பாடுபடுவார்.
 
குஜராத் மாநிலம் போல் கோவை மாநகரை சிறந்த நகரமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுப்பார். இதை உணர்ந்து மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். தமிழக மீனவர் பிரச்சனையில் தமிழக பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.