இன்னும் சற்று நேரத்தில் தமிழகப் பட்ஜெட் தாக்கல் – என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம் ?

Last Modified வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (08:50 IST)
2019-20 நிதியாண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

மே மாதத்தோடு ஆளும் பாஜக அரசின் பதவிக்காலம் முடிய இருப்பதால் 2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. அதுபோலவே வழக்கமாக மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டும் இந்த ஆண்டு தேர்தலால் முன்கூட்டியேத் தாக்கல் செய்யப்படுகிறது.

அதன்படி இன்று முதல் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டப்பேரவையில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட்டைப் போலவே இந்த பட்ஜெட்டும் தேர்தலை முன்னிட்டு பல சலுகைகள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழகத்தின் இப்போதைய தேவைகள் மற்றும் பிரச்சனைகளுக்கான சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முக்கியமாக பருவமழைப் பொய்த்துள்ள காரணத்தால்  குடிநீர் திட்டங்கள், விவசாயத்துக்காக அதிகளவில் நிதி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும் தமிழகத்தில் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போரட்டம் மற்றும் நேரத்தைக் குறைத்தல் தொடர்பான கோரிக்கைகள் எழுந்து வருவதால் டாஸ்மாக் நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை குறைக்கும் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றமும் டாஸ்மாக் கடைகளின் நேரக்குறைப்புத் தொடர்பாக தமிழக அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளது.

பட்ஜெட் தாக்கலுக்குப் பின் சபாநாயகர் தலைமையில்  பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றிய கூட்டம் நடக்கிறது. அதில் பேரவை எத்தனை நாட்கள் கூடும் என்பது தொடர்பான விவாதங்கள் நட்க்க இருக்கின்றன


இதில் மேலும் படிக்கவும் :