எங்களுக்குதான் சொந்தம்.. இழுபறியில் அதிமுக வங்கி கணக்கு!? – குழப்பத்தில் வங்கி!
அதிமுக வங்கி கணக்கை யாருக்கும் தரக்கூடாது என ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ள நிலையில் வங்கி கணக்கை கேட்டு ஈபிஎஸ்-ம் கடிதம் எழுதியுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக பதவியேற்றுள்ளார். அதை தொடர்ந்து பலரும் பதவியேற்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் கட்சி பொருளாளர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் தகுதி என அனைத்தும் நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டமே செல்லாது என ஓபிஎஸ் கூறி வருகிறார். இந்நிலையில் கட்சியின் வங்கி கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பு தனக்கு மட்டுமே உள்ளதாகவும், தன்னையன்றி வேறு யாருக்கு வங்கி கணக்கை அணுகும் விவரங்களை பகிரக்கூடாது என்றும் கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அதை தொடர்ந்து தற்போது கரூர் வைஸ்யா வங்கிக்கு கடிதம் எழுதியுள்ள எடப்பாடி பழனிசாமி, நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் கட்சி பொருளாளராக பதவியேற்றுள்ளதால் இனி வங்கி கணக்கை அவரே நிர்வகிப்பார் என்றும், வங்கி கணக்கு விவரங்களை தன்னை கேட்காமல் பிறர் மேற்கொள்ள வங்கி அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவருமே வங்கி கணக்கிற்கு உரிமை கோரி கடிதம் எழுதியுள்ள நிலையில் வங்கி குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.