1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (11:32 IST)

ஆப்ரேஷன் கந்துவட்டி - வேட்டையை துவங்கிய DGP சைலேந்திர பாபு!!

தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கந்துவட்டி நடவடிக்கையை தொடங்க காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

 
கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் உளுந்தூர்பேட்டை பட்டாலியனில் ஆயுதப்படை காவலராக பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு குடும்ப தேவைக்காக அந்த பகுதியில் வட்டிக்கு பணம் தரும் பெண் ஒருவரிடன் ரூ.5 லட்சம் வாங்கியுள்ளார். பின்னர் அதை 2 தவணைகளாக செலுத்தியும் உள்ளார்.
 
ஆனால் அவர் வாங்கிய கடன் தற்போது வட்டியுடன் 12 லட்ச ரூபாய் தர வேண்டும் என அந்த பெண் கூறியுள்ளார். மேலும் பணத்தை தராவிட்டால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து புகார் எழுதிய செல்வகுமார் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அதை கொடுக்க சென்ற போது மயங்கி விழுந்துள்ளார்.
 
அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் விஷம் அருந்தியதால் இறந்து விட்டது தெரிய வந்துள்ளது. கந்துவட்டி கொடுமையால் காவலரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கந்துவட்டி நடவடிக்கையை தொடங்க காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த ஆப்ரேஷனின் பெயரில் தமிழகம் முழுவதும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அப்ரேஷன் கஞ்சாவை நடத்தி வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.