தனிமைப்படுத்தப்பட்டவர் கடித்து மூதாட்டி உயிரிழப்பு – தேனியில் அதிர்ச்சி!
தேனியில் கொரோனா சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டவர் கடித்ததால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர் சமீபத்தில் துணி வியாபாரத்திற்காக இலங்கை வரை சென்று திரும்பியுள்ளார். அதனால் அவருக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தி இருக்க சொல்லி சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவரது பெற்றோர் அவரை தனி அறையில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
நீண்ட நாட்களாக தனி அறையில் இருந்ததால் மன உளைச்சலால் சட்டையை கிழித்து கொண்டு, ஆக்ரோஷமாக கத்தி கொண்டு வெளியேறிய அந்த இளைஞர், நாச்சியம்மாள் என்ற 90 வயது பாட்டியை தொண்டையில் கடித்துள்ளார். அவரை உடனே ஓடிவந்து பிடித்த பொதுமக்கள், மூதாட்டியை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே புதுக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.