வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (14:49 IST)

புதிய தலைமைச் செயலக முறைகேடு விசாரணை ஆணையர் திடீர் ராஜினாமா

முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது புதிய தலைமைச்செயலக கட்டிடத்தை கட்ட உத்தரவிட்டார். அவரது நேரடி மேற்பார்வையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிடம் தலைமை செயலகத்திற்காக கட்டப்பட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களால் திறக்கப்பட்டது.
 
ஆனால் ஜெயலலிதா முதல்வரான பின்னர் புதிய தலைமைச்செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றிவிட்டார். அத்துடன் பழைய தலைமைச்செயலகத்தையே அவர் பயன்படுத்தினார். மேலும் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு இருந்ததாகவும் கூறிய அவர் இதுகுறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி அவர்களை தலைவராக கொண்ட விசாரணை ஆணையம் ஒன்றையும் அமைக்க உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் சமீபத்தில் விசாரணை ஆணையங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியது. இதனையடுத்து புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு பற்றி விசாரித்துவந்த ஆணைய தலைவர் ரகுபதி சற்றுமுன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 
விசாரணை ஆணையம் பற்றி உயர்நீதிமன்றம் கூறிய கருத்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகவும், ஓய்வுபெற்ற பிறகு ஏதேனும் பதவியை தேடி செல்வதை போல் நீதிபதி சுப்பிரமணியம் கருத்து கூறியுள்ளதாகவும் ஆணையர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.