அண்ணாமலையை கண்டு இப்படி பயந்து போயுள்ளார்கள்.. பாஜக தலைவர் மாற்றம் குறித்து பிரபலம்..
அண்ணாமலை அவர்களை கண்டு இப்படி பயந்து போயுள்ளார்களே என்று எண்ணத்தோன்றுகிறது என பாஜக தலைவர் மாற்றம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் செய்தி குறித்து பாஜக பிரபலம் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அண்ணாமலை மாற்றப்படுவாரா? அப்படியானால் யார் தலைவர்? அவரா? இவரா? என்று கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பொழுதை போக்கிக் கொண்டிருக்கின்றனர் பாஜக அல்லாத மற்ற கட்சியினர். அண்ணாமலையை சுற்றியே இவர்களின் சிந்தனை இருப்பது தெளிவாகிறது. உண்மையில், இது குறித்து சிந்திக்க வேண்டியது பாஜகவினர் தானேயன்றி மற்ற கட்சியினர் அல்ல. தமிழகத்தில் பாஜக வின் வளர்ச்சி குறித்து எந்த அளவிற்கு மிரண்டு போயுள்ளனர் என்பதையே உணர்த்துகிறது.
இந்நிலை குறிப்பாக அண்ணாமலை அவர்களை கண்டு இப்படி பயந்து போயுள்ளார்களே என்று எண்ணத்தோன்றுகிறது. தி மு க ,காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளை போல குடும்ப கட்சியோ அல்லது ஒரு நபர் சார்ந்த கட்சியோ அல்ல பாஜக. திறமைக்கும், திறன் மிகுந்தவர்களுக்கும் பஞ்சமே இல்லாத கட்சி பாஜக. பொழுது போகவில்லையென்றால் சொந்த கட்சி கோஷ்டி பூசலை தீர்க்க முயற்சி செய்யட்டும்; அதைவிடுத்து, பாஜக விவகாரங்களில் தலையிட்டு மூக்கறுபட்டு ஏன் நிற்க வேண்டும்?
யார் தலைவராக இருக்க வேண்டும்? ஏன் மாற்ற வேண்டும்? எப்போது மாற்ற வேண்டும்? எங்கு மாற்ற வேண்டும்? எப்படி மாற்ற வேண்டும்? மாற்ற வேண்டுமா, இல்லையா? என்பதையெல்லாம் பாஜக தலைமை முடிவு செய்யும். அதுவரை இந்த ரீல் சுத்துற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் நல விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் சில ஊடகங்கள்.
Edited by Siva