வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (18:52 IST)

அம்மா உணவகங்களில் சுவையான, சுகாதாரமான உணவு வழங்க வேண்டும் – முதல்வர் உத்தரவு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களும் வேலையின்றி வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு நிவாரண உதவிகளை அரசு வழங்கிவருகிறது. சேலம், திருவாரூர் மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் ஆதரவற்றவர்களுக்கு இலவச உணவு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது சென்னையிலும் ஆதரவற்றவர்கள், முதியவர்கள் உணவு தேவைக்காக அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளதாவது :

தமிழகத்தில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தடையின்றி  நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்; அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களில் சுவையான, தரமான, சுகாதாரமான உணவு வழங்க வேண்டும் என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சிவப்பு மற்றும் ஆரஞ்சு பகுதிகளில் உரிய நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பச்சை பகுதிகளாக மாற்றிட போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை தேவை என தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் உள்ள பொதுக் கழிவறைகள் தினந்தோறும் 3 முறை சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்க வேண்டும். காய்கறி, மளிகை, ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை மாநகராட்சியில் நடமாடும் பரிசோதனை மையங்கள் 3ல் இருந்து 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்டுத்த தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.