தாய் மகள் கொலை வழக்கு: ட்ரோன் உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் தாய் மகள் கொலை வழக்கில், ட்ரோன் கேமரா உதவியுடன் கொலையாளிகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார், அங்கு அதிரடியாக நுழைந்து துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி மற்றும் அவரது மகள் ராமஜெயந்தி ஆகிய இருவரும் கடந்த மூன்றாம் தேதி கொலை செய்யப்பட்டு, அவர்கள் அணிந்திருந்த நகை கொள்ளை அடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் விசாரணை செய்தபோது, இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களை கண்டுபிடிக்க ட்ரோன் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், குற்றவாளிகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.
அந்த இடத்தை சுற்றிவளைத்த போலீசார், அவர்கள் இருவரும் தப்பிக்க முயன்றபோது துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். காட்டுக்குள் போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்ததாகவும், அப்போது உதவி ஆய்வாளர் அரிவாளால் வெட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து, கொலையாளி என்று சந்தேகிக்கப்பட்டவரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ததாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. துப்பாக்கி சூட்டால் காயம் அடைந்தவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவரிடம் விசாரணை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran