அரசியலை கெடுத்து விட்டனர்! – எம்.ஜி.ஆரை லிஸ்டில் சேர்த்த எம்.எல்.ஏ!
எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்றோர் அரசியலை கெடுத்து விட்டதாக அதிமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றிப்பெற்ற எம்.எல்.ஏ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொங்கு இளைஞர் பேரவையை நிறுவி அதன் தலைவராக இருப்பவர் தனியரசு. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து காங்கேயம் பகுதியில் எம்.எல்.ஏ ஆனவர் தனியரசு.
சமீபத்தில் ரஜினி, கமல் அரசியலில் தேவைப்பட்டால் கூட்டணி வைப்போம் என அறிவித்தனர். அவர்களாவது கட்சி தொடங்கி விட்டனர். அதற்கு தம்பிகளுக்கு வழிவிடுங்கள் என எஸ்.ஏ.சி உள்ளே ஆஜர் ஆகவும் விஜய்யின் அரசியல் பயணமும் விரைவில் தொடங்குமோ என பேச்சு அடிப்பட தொடங்கியுள்ளது.
இப்படியே தொடர்ந்து நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவது ரெகுலர் அரசியல்வாதிகள் சிலருக்கே எரிச்சலை வரவழைத்துள்ளது. இந்நிலையில் நடிகர்களில் அரசியல் நுழைவு குறித்து பேசிய எம்.எல்.ஏ தனியரசு ”கருணாநிதி, எம்.ஜி.ஆர் முதல் ரஜினி, கமல், விஜய் என அனைவரும் அரசியலை கெடுத்து விட்டனர். ரஜினி கமல் இணைந்தால் வார்டு உறுப்பினராக கூட ஆக முடியாது” என்று கூறியுள்ளார்.
அவர் பேச்சு வாக்கில் அப்படியே எம்.ஜி.ஆரையும் பட்டியலில் சேர்த்துவிட்டது அதிமுகவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.