அணி மாற ரூ.5 கோடி பேரம் - ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி
ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலக, தன்னிடம் பேரம் பேசப்படுவதாக எம்.எல்.ஏ சண்முகநாதன் கூறிய புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்டு 5ம் தேதி கட்சி பணியில் மீண்டும் ஈடுபடவுள்ளேன் என தினகரன் கூறிவிட்ட நிலையில், அவரை எப்படி தடுப்பது என்ற ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி தரப்பு ஈடுபட்டுள்ளது. அதோடு, விலகி சென்ற ஓ.பி.எஸ் அணியிடமும் மறைமுக பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
ஏற்கனவே ஓ.பி.எஸ் அணியில் இருந்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ விலகி, எடப்பாடி பழனிச்சாமி அணியில் சமீபத்தில் இணைந்தார். தற்போது, ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகி தங்கள் அணிக்கு வந்தால் ரூ.5 கோடி தருவதாக தன்னிடம் தினகரன் அணி மற்றும் எடப்பாடி அணியினர் பேரம் பேசுவதாக எம்.எல்.ஏ.சண்முகநாதன் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் அதிமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.