திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (12:58 IST)

MLA கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்!- சீமான்

MLA கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்!-  சீமான்
வீட்டுவேலைக்காகச் சென்ற இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, தினந்தோறும் துன்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளதாவது:
 
''பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொத்தடிமைபோல நடத்தி, கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தியானது அதிர்ச்சியளிக்கிறது. தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ணீர்மல்கக் கூறும் அப்பெண்ணின் காணொளியைப் பார்க்கிறபோது நெஞ்சம் பதைபதைக்கிறது. அப்பெண்ணுக்கு நடந்தேறியது சொல்லவியலா மனிதவதை! குரூரத்தின் உச்சம்! 
MLA கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்!-  சீமான்
எளிய குடும்பப் பின்னணியில் பிறந்ததால், வறுமையையும், ஏழ்மையையும் போக்க வீட்டு வேலைக்குச் சென்ற அப்பெண்ணுக்கு ஊதியத்தை வழங்காது, இரவு பகலென்றும் பாராது ஓய்வில்லாதவகையில் கடுமையான வேலைகளைக் கொடுத்து உழைப்பைச் சுரண்டியதோடு மட்டுமல்லாது, நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்குக் கொடூரமாகத் தாக்கியும், தினந்தோறும் துன்புறுத்தியும் வந்த அக்குடும்பத்தினரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரது குடும்பமெனும் அதிகாரத்திமிரே மனிதத்தன்மையற்ற இக்கொடூரங்களை அப்பெண்ணின் மீது பாய்ச்சுவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறதென்பது வெளிப்படையானதாகும். எளிய மனிதர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இக்கோரத்தாக்குதல்களும், வன்முறைவெறியாட்டங்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய கொடுங்குற்றங்களாகும்.
 
ஆகவே, தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, இளம் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கித் துன்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.