ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிர்நீத்த சுஜித் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களுக்கு பதிலளித்தார். முதல்வரின் இந்த பதில்களுக்கு தற்போது முக ஸ்டாலின் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து நான்கு நாட்கள் கழித்தும் உயிரோடு மீட்கப்படாத நிலையில், நாட்டையே சோகத்திலும் குற்ற உணர்விலும் தள்ளிவிட்டுச் சென்றுள்ளான் சுஜித் வில்சன். இச்செய்தியைக் கேள்விப்பட்டதும், 'சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும், அவரது குடும்பம் துடிப்பதைப் போல நாமும் துடிக்கிறோம், அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும்' என்று அறிக்கை வெளியிட்டேன்.
ஒருநாள் கடந்து, இரண்டாவது நாள் ஆனதும், 'நாம் அங்கே போய்ப் பார்த்து அந்தச் சிறுவனின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லலாம்' என்று நினைத்தேன். ஆனால் இந்த நேரத்தில் சென்றால் அரசியல்ரீதியானதாக ஆகிவிடும், தேவையற்ற கவனச் சிதறல் ஏற்படலாம் என்பதால், சென்னையில் இருந்தபடியே அனைத்தையும் இடையறாது கவனித்து வந்தேன். அமைச்சர்களும், அதிகாரிகளும் பேட்டிகள் கொடுத்தார்களே தவிர, சிறுவனை உயிருடன் மீட்பதற்குத் தேவைப்படும் நகர்வுகள் இல்லை. இறுதியாக உயிரற்ற சடலமாகத் தான் சுஜித் மீட்கப்பட்டான். சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்த்துவிட்டு, சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் சொல்லிவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிதியுதவியும் செய்துவிட்டு, புறப்பட்ட நேரத்தில் இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டார்கள். “அரசாங்க இயந்திரம் முழுமையாகச் செயல்படவில்லை, ராணுவ உதவியை விரைந்து பெற்று இருக்க வேண்டும்' என்று எனது கருத்தைச் சொன்னேன். எனது ஆதங்கத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை; தாங்கிக் கொள்ளவும் இயலவில்லை.
அனைத்துத் தோல்விக்குப் பிறகே எங்களை அழைத்தார்கள்” - என்று தேசியப் பேரிடர் மீட்புப்படையின் ராஜன் பாலு கூறியிருக்கிறாரே! அதற்கு என்ன பொருள்? சிறுவனை மீட்பதற்கான செயல்முறையை சரியாகத் திட்டமிடவில்லை; காலம் கடந்தே ஒவ்வொன்றாகச் சிந்தித்திருக்கிறார்கள் என்பதுதானே அதன் பொருள்? உண்மையை இப்படிச் சொன்னதற்காக, ராஜன் பானு அவர்கள் மீது முதல்வர் எரிந்து விழுந்தாலும் விழுவார்.
எல்லாவற்றிலும் நாங்கள் சரியாகத்தான் செயல்பட்டோம் என்று சொல்வதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர், 'அரசு செயல்பாட்டில் தொய்வு இருந்ததாக தவறான குற்றச்சாட்டை ஸ்டாலின் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அவர் என்ன விஞ்ஞானியா? அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார். மனசாட்சியுடன் பேச வேண்டும்' என்று சோகமான நிகழ்வில், சவால் விட்டுக் கொக்கரித்திருக்கிறார். 2009-ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் இதுபோல் ஒரு சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தபோது அன்றைய அமைச்சர் ஸ்டாலின், ராணுவத்தை வரவழைக்தாரா?' என்றும் எதிர்க்கேள்வி கேட்டுள்ளார். எதையாவது சொல்வதற்கு முன்னால், அதைப் பற்றிய முழு விபரத்தையும் தெரிந்து கொண்டு பேச வேண்டும்.
22.2.2009-ஆம் நாளன்று தேனி மாவட்டம் தோப்புப்பட்டியைச் சேர்ந்த 6 வயது சிறுவனான மாயி இருளன் 550 அடி உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து விட்டான். உடனடியாக தீயணைப்புத்துறை
வீரர்கள் வந்தார்கள். மதுரையில் இருந்து மணிகண்டன் குழுவினர் வரவழைக்கப்பட்டார்கள். 80 அடி ஆழத்தில் சிறுவன் இருக்கிறான் என்று கண்டுபிடிக்கப்பட்டதும், உடனடியாக துணை ராணுவப்
படையினருக்குச் சொல்லப்பட்டது. திருச்சியில் இருந்து ஒரு துணை ராணுவப் படையும் பெங்களூரில் இருந்து இன்னொரு துணை ராணுவப் படையும் வரவழைக்கப்பட்டது.
திருச்சியில் இருந்து வந்த துணைராணுவப் படைக்கு பி.டி. தாமஸ் அவர்கள் தலைவராக இருந்தார்கள். அவரோடு வந்த நான்கு வீரர்கள்தான் அந்தச் சிறுவனை மீட்டார்கள். சரியாக முப்பது மணி நேரத்தில் அச்சிறுவன் ஆழ்த்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், அச்சிறுவன் இறந்து போனான்.
அன்று கழக ஆட்சியின் வேண்டுகோளை ஏற்று தான் ராணுவம் வரவழைக்கப்பட்டது. இது தெரியாமல் ஒரு முதலமைச்சர், 'அன்றைக்கு ராணுவத்தை வரவழைத்தாரா ஸ்டாலின்?” என்று கேட்கிறார் என்றால், குழந்தையை இழந்த சோகத்தை விட, என் மீதான குரோதம்தான் அவரது பேச்சில் மேலோங்கி வெளிப்படுகிறது. தன்னுடைய அரசாங்கத்தின் அலட்சியமும் அக்கறையின்மையும் வெளிச்சத்திற்கு வந்து விட்டதே
என்ற ஆத்தீரத்தில், என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல், ஏதேதோ முதலமைச்சர் பேசியிருக்கிறார். கேள்வி கேட்ட நிருபர்கள் மீது சினத்துடன் பாய்ந்திருக்கிறார்.
'நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கலாமே?' என்று ஒரு நிருபர் கேட்கிறார்; “என்ன தொழில்நுட்பம் இருக்கிறது. நீங்களே சொல்லுங்கள்' என்று கோபமாக நிருபர்களைக் கேட்கிறார். 'நிருபர்கள் தெளிவா பேசணும்' என்று அறிவுரை சொல்கிறார். 'நாங்க என்ன பண்ணனும்?' என்று எரிச்சல் அடைகிறார். 'நான் சொல்வதைக் கேளுங்கள்' என்று எச்சரிக்கை செய்கிறார். இதுதான் ஒரு முதலமைச்சர் நடந்து கொள்ளும் முறையா?
எதுவும் செய்யாத இயலாமையைக் கேள்வி கேட்டால் கோபப்படுவதா? பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள்; ஒன்று பதில் சொல்லவேண்டும்; அல்லது அமைதி காக்க வேண்டும்; அதை விடுத்து, நிருபர்களிடம் கோபத்தைக் காட்டியது போலத்தான் என்னிடமும் காட்டி இருக்கிறார். சுஜித் மரணத்தில் இருந்து எந்தப் பாடத்தையும் எடப்பாடி பழனிச்சாமி கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதைத்தான் அவரது பேட்டி காட்டுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, சுபஸ்ரீ என்ற இளம்பெண்ணை கட்அவுட்டுக்குப் பலி கொடுத்தோம். அதன்பிறகும் நீதிமன்றத்துக்குப் போய் கட்அவுட் வைக்க அனுமதி வாங்கியவர் இந்த எடப்பாடி பழனிசாமி. இதுவரை நீட் தேர்வின் கொடுமை காரணமாக ஏழு உயிர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளன. அதன்பிறகும் நீட் தேர்வைத் தடுக்க முடியாதவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி. 13 மூன்று பேரைச் சுட்டுக் கொன்று விட்டும், ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு நிரந்தரத் தடை ஏற்படுத்த அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றாதவர் இந்த எடப்பாடி பழனிசாமி. அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறையோ ஆர்வமோ இல்லை என்பதன் வெளிப்பாடு தான் இந்தப் பேட்டி.
இந்த ஆணவப் பேச்சுகளை எடப்பாடி பழனிசாமி தவிர்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். ஏட்டிக்குப் போட்டி என்று போனால், எதற்கும் பயன்படாது என்பதை உணர வேண்டும். இது அறிவுரை அல்ல; முதல்வருக்கு எனது அன்பு வேண்டுகோள்!