முகஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் எப்போதும் முதல்வராக முடியாது: எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் அனைத்து தொண்டர்களும் முதலமைச்சராக முடியும் என்றும் ஆனால் திமுகவில் இருந்து முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினால் கூட முதல்வராக முடியாது என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற எம்ஜிஆரின் 103வது பிறந்த நாள் விழாவில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது ’அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பதற்கு அடித்தளமிட்டவர் எம்ஜிஆர் என்றும், அந்த அடித்தளத்தில் தான் சாதாரண தொண்டனாக இருந்த நான் முதலமைச்சராகி உள்ளேன் என்றும் அதேபோல் என்னைப்போல் எத்தனையோ பழனி சாமிகள் முதலமைச்சராக அதிமுகவிலிருந்து ஆக முடியும் என்றும் கூறினார். ஆனால் திமுகவில் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கூட இனிமேல் தமிழகத்தின் முதல்வராக முடியாது என்று அவர் தெரிவித்தார்
எம்ஜிஆர் மறைந்தபோது அதிமுக அழிந்துவிடும் என்று கருணாநிதி கனவு கண்டதாகவும் ஆனால் உடைந்த கட்சியை இணைத்து எம்ஜிஆரின் ஆட்சியை ஜெயலலிதா அவர்கள் வழி நடத்தியதாகவும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி புரிந்த காலங்கள் தான் பொற்காலம் என்றும் அவர் தெரிவித்தார்
மேலும் எம்ஜிஆர் காலத்து திரைப்படங்கள் உயிரோட்டமாக இருந்ததாகவும் தற்போது உள்ள திரைப்படங்களில் ஆக்கபூர்வமான கருத்துக்கள் இல்லை என்றும் இன்றைய திரைப்படங்கள் பார்த்தால் குழந்தைகள் கெட்டுப் போய்விடுவார்கள் என்றும் திரைப்படங்களையும் அவர் சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது