ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2017 (13:16 IST)

பறந்து சென்ற தெர்மா கோல் ; பல்பு வாங்கிய அமைச்சர் ; வைரல் வீடியோ

வைகை அணையில் உள்ள நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சரும், அதிகாரிகளும் செய்த செயலைக் கண்டு ஊரே சிரித்துக் கொண்டிருக்கிறது.


 

 
71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் உள்ள நீர்மட்டம் தற்போது வறட்சி காரணமாக 23 அடியாக மட்டுமே குறைந்து காணப்படுகிறது. இந்த தண்ணீரை வைத்துக் கொண்டு இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே மதுரை மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்கிற சூழ்நிலை நிலவுகிறது.
 
இந்நிலையில், தற்போது கோடைக்காலம் என்பதால், அடிக்கிற வெயிலில் இருக்கிற நீரும் கொஞ்சம் கொஞ்சமாக ஆவியாகிக் கொண்டிருக்கிறது. எனவே, அதை தடுப்பதற்காக அணை முழுவதும் தெர்மா கோல் கொண்டு மூடுவது என சில புத்திசாலி அதிகாரிகள் கூற, அதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூவும் கண் அசைத்தார்.
 
10 சதுர கி.மீட்டர் நீளம் கொண்ட வைகை அணையை வெறும் 300 அட்டைகளை கொண்டு மூடுவது என அதிகாரிகள் முடிவெடுத்தனர். அமைச்சரும் வந்தார். இரண்டு தெர்மாகோலை தண்ணீரில் மிதக்க விட்டு விட்டு பேட்டி கொடுத்தார். இதற்கான மொத்த செலவு ரூ.10 லட்சம் என்றார்.  அதன்பின், அந்த அட்டைகளை ஒன்றோடு ஒன்றாக ஒட்டி, மிதவை படகு மூலம் தண்ணீருக்குள் சென்று அங்கிருந்த ஆட்கள் போட்டனர். ஆனால், அடித்த காற்றில் அவர்கள் கரைக்கு வருவதற்கு முன், அந்த அட்டைகள் கரையில் ஒதுங்கிவிட்டன.
 
இப்படி ஒரு ஐடியாவை எந்த அதிகாரி கொடுத்தனர் என அங்கிருந்த மக்கள் கிண்டலடிக்கத் தொடங்க, தண்ணீர் பிரச்சனை தீர வேண்டுமெனில் மழை வர வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு அங்கிருந்து திரும்பி விட்டாராம்.
 
இந்த திட்டம் தோல்வி அடைந்ததால், தற்போது, ரப்பர் பந்துகள் மூலம் வைகை அணை மூடப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளர். 
 
வழக்கம் போல், இந்த விவகாரத்தை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள். 
 

நன்றி - பாலிமர் செய்தி