திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (08:50 IST)

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றிணைப்பு? இதுக்குதான் ஆதார் இணைப்பா? – அமைச்சர் விளக்கம்!

Senthil Balaji
சமீபத்தில் மின் இணைப்பு எண்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட நிலையில் ஒருவர் பெயரில் உள்ள பல இணைப்புகளை ஒரே இணைப்புகளாக மாற்றதான் இந்த நடவடிக்கை என வெளியான தகவல் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக மின்சார வாரிய கணக்கு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம் என மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதை தொடர்ந்து கடந்த அக்டோபர் தொடங்கி பிப்ரவரி சுமார் 99 சதவீதம் மின் இணைப்பு எண்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டன. ஒருவர் பெயரில் பல மின் இணைப்புகள் இருந்தாலும் அவை ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

தற்போது பெரும்பாலான இணைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ஒரு வீட்டு வளாகத்திற்குள் ஒருவர் பெயரில் இருந்த பல மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்ற சொல்லி அவருக்கு மின்வாரியம் கடிதம் அனுப்பிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதனால் ஒருவர் பெயரில் உள்ள பல மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக மாற்றதான் இந்த ஆதார் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி “ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது. இது தொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை எந்த பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் பல மின் இணைப்புகளை ஒன்றாக மாற்ற சொல்லி அறிவிப்பு அனுப்பிய அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K