வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 8 நவம்பர் 2018 (09:58 IST)

விஜய் ஒரு கோழை: அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் விஜய் அதிமுக அர்சை விமர்சித்து சர்கார் படத்தில் நடித்திருப்பது கோழைத்தனமானது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
முருகதாஸ் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிய சர்கார் திரைப்படம் தீபாவளியன்று உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
இப்படத்தில் வரும் பல வசனங்கள் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் கடுப்பான ஆளுங்கட்சி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, எம்.எல்.ஏ தனியரசு உள்ளிட்டோர் படத்தின் மீது வழக்கு தொடரப்படும் என மிரட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று சென்னை மெரினாவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், இப்பொழுது நடிகர்கள் அரசை விமர்சித்து படத்தில் நடிப்பது பேஷனாகிவிட்டது.
 
அரசியலுக்கு வரவிருக்கும் நடிகர்கள் அவர்களது படத்தில் அவர்களின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும், அதைவிட்டுவிட்டு அரசை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் சர்கார் படத்தை எடுத்திருப்பார்களா? விஜய் இந்த படத்தில் நடித்திருப்பாரா? கண்டிப்பாக நடித்திருக்கமாட்டார். விஜயின் இந்த செயல் கோழைத்தனமானது. படத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பேசினார்.