1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2020 (14:50 IST)

ஊரடங்கை மீறி செல்போன் மூலம் மீன் விற்பனை! – கடைகளுக்கு சீல் வைத்த வட்டாட்சியர்!

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனுமதி இன்றி மீன் விற்ற கடைகளை கோவில்பட்டி வட்டாட்சியர் சீல் வைத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து வகையான அங்காடிகளும், இறைச்சி கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டியில் ஊரடங்கு விதிகளை மீறி இறைச்சி கடைகள் செயல்பட்டு வருவதாக வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து உடனடி சோதனை மேற்கொண்ட அவர் கோவில்பட்டி வேலாயதபுரம் பகுதியில் அத்துமீறி செயல்பட்டு வந்த இறைச்சி கடைகளை சீல் வைத்ததுடன், கறி வெட்டும் கத்தி முதலியவற்றையும் பறிமுதல் செய்தார்.

தொடர்ந்து அந்த பகுதியில் சோதனை செய்ததில் கடைகளை மூடிக்கொண்டு மீன், இறைச்சி வெட்டுவதில் சில கடைகள் ஈடுபட்டுள்ளன. விசாரித்தபோது செல்போன் மூலம் ஆர்டர்கள் பெற்றுக் கொண்டு கடைகளில் இறைச்சி மீன் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.