கடித்த பாம்பை கையோடு கொண்டுவந்த நபர்… களேபரமான மருத்துவமனை!
கள்ளக்குறிச்சி அருகே ஒருவர் தன்னை கடித்த பாம்பை அடித்துக் கையோடு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேன்குணம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஐயப்பன். இவர் தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அவரைக் கட்டுவிரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் மயக்கமடைந்துள்ளார். இதை அடுத்து அவரைக் கடித்த பாம்பை அருகில் வேலை செய்தவர்கள் அடித்துக் கொன்றுள்ளனர்.
ஐய்யப்பனை அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது மருத்துவர்களிடம் காட்டுவதற்காக அந்த பாம்பையும் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் சிகிச்சையின் போது மருத்துவரிடம் அதைக் காட்டியும் உள்ளனர். இதைப்பார்த்த மருத்துவர் பதற்றமாகியுள்ளனர். ஆனால் பாம்பு இறந்துவிட்டது என அறிந்ததும் மேற்கொண்டு சிகிச்சையை செய்துள்ளார்.