செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2015 (15:44 IST)

சட்டசபையில் 2ஜி முறைகேடு குறித்து பேசியதால் முதல்வர் ஓ.பி.யுடன் திமுகவினர் வாக்குவாதம்

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
 
அப்போது அவர் கூறியதாவது:–
 
இந்த நிதி நிலை அறிக்கையில் அனைத்து துறைகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு சில துறைகளுக்கு கணிசமாக நிதி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
 
ஆனால் நேற்று முன்தினம் துரைமுருகன் இந்த அரசை குறை கூறுவதற்காக தலைமை நிதிநிலை கணக்காயர் (சி.ஏ.ஜி) அறிக்கையை வைத்துக் கொண்டு சில விவரங்களை தெரிவித்தார். கடந்த ஆண்டு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதை பெரிய குற்றமாக கூறினார்.
 
இது ஒவ்வொரு ஆட்சியிலும் நடைபெறும் விஷயம் தான். திமுக ஆட்சியிலும் இதேபோல் நடந்துள்ளது. செலவழிக்கப்படாத தொகை மறு ஆண்டு திட்டங்களுக்கு செலவழிக்கப்படும். இதில் நிர்வாக தவறு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே இந்த ஆட்சி நிர்வாகத்தில் எந்த தவறும் நடக்கவில்லை.
 
நாட்டிற்கு வர வேண்டிய வருவாயை உள்நோக்கத்துடன் தனியார் பயன்பெறும் வகையில் முறைகேடு செய்வது தான் தவறு என மத்திய தணிக்கை குழு ஒரு அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
 
அந்த வகையில் தான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது. இது திமுகவின் மாபாதக செயல் என விமர்சிக்கப்படுகிறது.
 
(இதற்கு மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து திமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்).
 
தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், நான் பேசியதில் ஆட்சேபனை இருந்தால் நீக்குங்கள், ஏன் கோபப்படுகிறீர்கள். செலவழிக்கப்படாத தொகை சரண்டர் பற்றி கூறியதற்குதானே நான் பதில் சொன்னேன். நாட்டிற்கு நாங்கள் இழப்பை ஏற்படுத்தவில்லை. தணிக்கை துறையிலும் அவ்வாறு கூறவில்லை. நாட்டிற்கு இழப்பு ஏற்படுத்திய 2ஜி விஷயத்தை உதாரணத்துக்கு சொல்லக்கூடாதா? என்றார்.
 
அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆவேசத்துடன் அப்படியானால் நாங்கள் பெங்களூர் வழக்கு தொடர்பாக பேசலாமா?. 2ஜி பற்றிய பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றனர்.
 
வாக்குவாதம் நீடித்ததால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.