1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 9 மே 2024 (13:23 IST)

நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம்..! நாய்கள் கடித்தால் உரிமையாளர் மீது நடவடிக்கை..! ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை...!!

radhakrishnan
நாய் கடித்தால் அதன் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்  என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 ராட்வெய்லர் நாய்கள் கடித்து குதறி படுகாயம் அடைந்த குழந்தையை பார்க்கும் போது வேதனையாக உள்ளது என்றார். குழந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கான செலவு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மதுரைக்கு அப்புறப்படுத்தப்பட்ட ராட்வீலர் நாய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை, நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம், மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்றார். மாடு முட்டுவது, நாய் கடிப்பது என்பது தேசிய அளவிலான பிரச்சினை என்றும் தேசிய அளவிலான விவாதம் தேவை என்றும் அவர் கூறினார்.
 
குறிப்பிட்ட சில நாய் இனங்களை இறக்குமதி செய்ய, விற்பனை செய்ய, இனப்பெருக்கம் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட உயர்நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். 

 
நாய் உள்ளிட்ட எந்தவொரு விலங்குகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் எங்களுக்கு கிடையாது என்றும் நாய் கடித்தால் அதன் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.