திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 20 நவம்பர் 2024 (16:58 IST)

நீதிமன்றம் அருகே வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு: கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

கிருஷ்ணகிரியில் நீதிமன்ற வளாகம் அருகே வழக்கறிஞரை பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொண்டிருந்தபோது, அதை சுற்றியுள்ளவர்கள் வேடிக்கை பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் கண்ணன். வழக்கறிஞரான இவர் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த நிலையில், திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால், படுகாயம் அடைந்த கண்ணன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார், அரிவாளால் வெட்டியவரை தேடி வருவதாகவும், முதல் கட்ட விசாரணையில் அரிவாளால் வெட்டியவர் பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் என்றும் கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக வழக்கறிஞரை அரிவாளால் வெட்டியதாகவும், இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்று காலை, ரமணி என்ற ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், தற்போது வழக்கறிஞர் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால், சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி என்பவர் கத்தியால் குத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran