1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2015 (13:19 IST)

சாலையோரம் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது லாரி கவிழ்ந்து விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே  100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி கவிழ்ந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.


 

 
குடியாத்தம் அருகே உள்ள செம்பேடு ஊராட்சி நாவிதம்பட்டி கிராமத்தில் சாலையோரம் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் பெண்கள் உள்ளிட்ட பல தொழிலாளர்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது டிப்பர் லாரி ஒன்று, வேலூரில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வந்தது. அந்த லாரி எதிர்பாராத விதமாக, திடீரென சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டதால், கால்வாயில் கவிழ்ந்தது. இதனால் அந்த லாரிக்கு அடியில், பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்கள் சிக்கினர்.


 

 
இந்நிலையில், அங்கிருந்த பிற தொழிலாளர்கள் கூச்சலிட்டபடி அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். அவர்களும் லாரிக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
இது குறித்து குடியாத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு கிரேன் வரவழைக்கபட்டது. சம்பவ இடத்திற்கு வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் வந்தனர்.
 
கிரேன் மூலம் மீட்பு பணிகள் நடந்தது. அப்போது லாரிக்கு அடியில் சிக்கியிருந்த 2 பெண் தொழிலாளர்கள் பிணமாக மீட்கப்பட்டனர்.


 

 
அவர்கள் செம்பேடு காலனியைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் மனைவி மல்லிகா, நாகரத்தினம் என்பவரின் மனைவி பாப்பு என்கிற லட்சுமி என்பது தெரியவந்தது.
 
இதைத் தொடர்ந்து, அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் வேலூர் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.