1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2015 (20:23 IST)

குறுவை நெல் ஈரப்பதத்துடன் இருப்பது தவிர்க்க முடியாது - ராமதாஸ்

குறுவை நெல் ஈரப்பதத்துடன் இருப்பது தவிர்க்க முடியாது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ஆம் நாள் நெல் கொள்முதல் விலை அறிவிக்கப் படுவதும், அடுத்த நாள் முதல் குறுவைப்பருவ நெல் கொள்முதல் தொடங்குவதும் வழக்கம் ஆகும். நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் விலையை கடந்த 30ஆம் தேதி அரசு அறிவித்தது.
 
ஆனால், அதன்பின் ஒருவாரம் ஆகியும் காவிரி பாசன மாவட்டங்களில் போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை. 
 
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில், குறுவை நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாகக் கூறி அவற்றை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாகக் கூறப்படுகிறது.
 
காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நிலைமையையும், குறுவை நெல் ஈரப்பதத்துடன் இருப்பது தவிர்க்க முடியாது என்பதையும் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் தமிழக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
 
நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை தீவிரப் படுத்துவதுடன், 21 சதவீத வரை ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.