1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 டிசம்பர் 2017 (13:56 IST)

ஜெ.வின் வீடியோ வெளியிட்டது கீழ்த்தரமான செயல் - கிருஷ்ணபிரியா ஆதங்கம்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டது கீழ்த்தரமான செயல் என சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா கருத்து தெரிவித்துள்ளார்.

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தற்போது வெளியிட்டுள்ளார்.   
 
20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார்.  ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக தினகரன் தரப்பில் இருந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு ஜெ. மாற்றப்பட்ட போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
 
சசிகலா குடும்பதினர் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழி சொல்லை நீக்கவே இந்த வீடியோவை வெளியிட்டதாக அவர் தெரிவித்துளார். 
 
இந்நிலையில், சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது முகநூல் பக்கத்தில் “தினகரன் உடனிருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்” என பதிவிட்டுள்ளார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அவரின் சகோதரர் விவேக் ஜெயராமன், தினகரன் தரப்பிடம் அதிருப்தியை தெரிவித்ததாக செய்திகள் வெளியானது . எனவே, இந்த வீடியோ தொடர்பாக தினகரனுக்கும், சசிகலா குடும்பதினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.