ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 14 மே 2016 (15:27 IST)

தமிழ்நாடு, இனி "அம்மா நாடு" ஆக மாறிவிடும் - அலறும் அரசியல் தலைவர்

தமிழ்நாடு, இனி "அம்மா நாடு" - அலறும் அரசியல் தலைவர்

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட சபை தேர்தலில், அதிமுக ஜெயித்துவிட்டால் தமிழ்நாடு அம்மா நாடாக மாறிவிடும் என திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ள கூறியுள்ளதாவது:-
 
தப்பித் தவறி இந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று விட்டால், “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றி “அம்மா நாடு” என்று 110 ஆவது விதியின் கீழ் அறிவித்து விடுவார்.
 
15ஆவது சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 24 மணி நேரமே உள்ளது. ஆடம்பரம், ஆணவம், அகம்பாவம் ஆகியவற்றின் உச்சியிலே அமர்ந்துள்ள ஜெயலலிதா, கடந்த ஐந்தாண்டு காலத்தில் யாரையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை; “எனது அரசு” - “நான் அறிவிக்கிறேன்” என்று அவர் விடுத்த ஒவ்வொரு அரசு அறிக்கையிலும் தொக்கி நிற்கும் தன் முனைப்புத் தொனியை யாரும் மறக்கவில்லை.
 
எந்த எதிர்க் கட்சியினரையும் பேரவையில் ஜனநாயக ரீதியாக எதிர்க் கருத்துகளைப் பேசவோ, ஆக்க பூர்வமாக விமர்சிக்கவோ, குரல் எழுப்பவோ அனுமதிக்கவில்லை என்பதை நாடே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.
 
2011ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து பதவிக்கு வந்தவுடன், வாரந்தோறும் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்று ஜெயலலிதா தான் கூறினார். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவும் இல்லை. முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்கவும் இல்லை.
 
அதுபோலவே அரசு அலுவலர் சங்கங்களின் பிரதிநிதிகளையோ, விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளையோ, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையோ இந்த ஐந்தாண்டு கால வரலாற்றில் சந்தித்தது உண்டா என்றால் அதுவும் கிடையாது. தற்போது தேர்தல் என்றதும், “மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்” என்று கபட வேடம் போடுகிறாரே, அந்த மக்களை எங்கேயாவது, எந்த மாவட்டத்திற்காவது சென்று கடந்த ஐந்தாண்டுகளில் சந்தித்தது உண்டா என்றால் அதுவும் கிடையாது தான்.
 
குறிப்பாக விளக்க வேண்டுமானால், “மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்” என்பதற்கு மாறாக “எனக்காக நான், எனக்காகவே நான்; சசிகலா மற்றும் பரிவாரங்களுக்காக மட்டுமே நான்” என்று சொல்லிக் கொள்ளலாம். தப்பித் தவறி இந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று விட்டால், இதைத் தான் மறுபடியும் அவரே சொல்லிக் கொள்வார். “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றி “அம்மா நாடு” என்று 110 ஆவது விதியின் கீழ் அறிவித்து விடுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.